காந்தி ஜெயந்தி மற்றும் பெருந்தலைவர் காமராஜரின் நினைவு தினத்தை முன்னிட்டு, பெண்களுக்கு சம உரிமை மற்றும் சம வாய்ப்பு வழங்குவதை வலியுறுத்தி தூத்துக்குடியில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
பெண்களுக்கு கல்வி பெறும் உரிமை, வேலைவாய்ப்பு, தொழில் முனைவு, அரசியல் பங்கேற்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சம உரிமையும், சம வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும். அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தூத்துக்குடி காமராஜ் கல்லூரி பழைய மாணவர்கள் சங்கம் சார்பில் இந்த விழிப்புணர்வு மாரத்தான் நடத்தப்பட்டது.

தூத்துக்குடி கடற்கரை சாலையில் இருந்து மாரத்தான் ஓட்டம் தொடங்கியது. இதில் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், 18 வயதுக்கு கீழ் உள்ள ஆண்கள், 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், 18 வயதுக்கு கீழ் உள்ள பெண்கள் என 4 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன.
மாரத்தான் ஓட்டத்தை காமராஜ் கல்லூரி முதல்வர் முனைவர் பானுமதி தலைமையில், தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன், அகரம் பரமகுரு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
கடற்கரை சாலையில் இருந்து புறப்பட்ட மாரத்தான் ஓட்டம் ஜார்ஜ் ரோடு, திருச்செந்தூர் சாலை, துறைமுக சாலை வழியாக நடைபெற்றது. இதில் 7 கிலோமீட்டர் மற்றும் 5 கிலோமீட்டர் என இரு தூரங்களில் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது.
இதில் தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஓடினர். பெண்களின் சமத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த மாரத்தான் பொதுமக்களிடையே கவனத்தை ஈர்த்தது.
முடிவில், ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், பங்கேற்ற மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தனர்.